வினையான ஓட்டல் சாப்பாடு... சுற்றுலாப் பயணிகள் 18 பேர் அட்மிட்: கேரளத்தில் மீண்டும் அதிர்ச்சி

வினையான ஓட்டல் சாப்பாடு... சுற்றுலாப் பயணிகள் 18 பேர் அட்மிட்: கேரளத்தில் மீண்டும் அதிர்ச்சி

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டதில் புட் பாய்சன் ஏற்பட்டு தேவானந்தா என்னும் 16 வயது மாணவி சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று வயநாட்டில் புட் பாய்சன் ஏற்பட்டு 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 23 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் வயநாட்டிற்கு இன்பச் சுற்றுலா வந்தனர். இவர்கள் மாவட்டத்தில் மூன்று உணவகங்களில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதில் எந்த உணவகத்தில் சாப்பிட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தியது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களில் 18 பேருக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவச் சோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவு புட் பாய்சன் ஆகியிருப்பது தெரியவந்தது.

இதேபோல் கடந்தவாரம் ஷவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிர் இழந்த நிலையில் இன்னும் 49 பேர் மருத்துவ, வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இந்தவாரத்தில் மட்டும் மளப்புரம், கொல்லம் மாவட்டங்களிலும் புட் பாய்சன் விவகாரங்கள் பதிவாகியிருப்பதாகவும், இருந்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே காசர்கோட்டில், புட் பாய்சன் ஆன கடையில் ஷவர்மாவோ, வேறு ஏதும் சாப்பிட்டு ஒவ்வாமை இருப்பதாக மக்களில் யார் உணர்ந்தாலும் அவர்களுக்கு இலவசமாகவே அரசு மருத்துவ சேவை வழங்கும் என கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

கேரளத்தில் பரவலாகவே தலைதூக்கிவரும் புட் பாய்சன் விவகாரம், அம்மாநில சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Related Stories

No stories found.