ரூ.4.16 கோடி... ஹேக்கிங் மூலம் லைஃப் செட்டில்மென்டுக்கு ஆசைப்பட்ட ஐஐஐடி மூளை!

ஹேக்கர் - லஷ்மிபதி
ஹேக்கர் - லஷ்மிபதி

ஐஐஐடி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த ஆந்திர இளைஞர் ஒருவர், இணையதளம் ஒன்றை ஹேக் செய்து ரூ.4.16 கோடி மதிப்பிலான ரிவார்டு பாயிண்டுகளை சுரண்டி எடுத்திருக்கிறார். இதன் மூலம் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து துபாயில் செட்டிலாகவும் திட்டமிட்டிருந்தார். பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையில் குட்டு வெளிப்பட, தற்போது ஹேக்கிங் புலி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது.

23 வயதாகும் பொம்மலூர் லட்சுமிபதி, ஓங்கோல் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’ (ஐஐஐடி) உயர்கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர். பெங்களூரு முதல் துபாய் வரை பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றியவர், சுயமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் உத்தேசத்தில் ஹேக்கிங் திருவிளையாடலை மேற்கொண்டு சிக்கியிருக்கிறார். இந்திய அளவில் சைபர் க்ரைம் வழக்குகளில் கவனிக்கத்தக்க ஒன்றாக லட்சுமிபதியின் ஹேக்கிங் கவனம் பெற்றிருக்கிறது.

கல்லூரி படிப்பின் ஊடாக ஹேக்கிங் தொழில்நுட்பத்தையும் கற்றிருக்கிறார். பின்னர் சுய முயற்சி மூலம் ஹேக்கிங் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஒருமுறை தனது கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரிவார்டு பாயிண்டுகள் வரவே, அதன் பின்னணியில் சிஸ்டம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆராய்ந்தார். அந்த வகையில் வெகுமதி திட்டங்களை நிர்வகிக்கும் ’ரிவார்ட்360’ என்ற நிறுவனத்தின் இணையதளத்தை குறிவைத்தார். அதனை நேக்காக ஹேக் செய்து பரிசு வவுச்சர்களை தனது கணக்கில் மாற்றினார்.

இந்த ஹேக்கிங் மோசடியை எவரும் அறியவில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட லஷ்மிபதி அடுத்த 6 மாதங்களில் 5 கிலோ தங்கம் உட்பட ரூ.4.16 கோடி வரை பரிசுகளை அள்ளினார். தங்கம், வெள்ளி, இருசக்கர வாகனங்கள் என வகை தொகையாய் பரிசுகளை குவித்தவர், அதனை தனது கிராமத்திலும், பெங்களூரு வீட்டிலும் அடுக்கினார்.

லஷ்மிபதியிடம் கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகள்
லஷ்மிபதியிடம் கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகள்

இதற்கிடையே ரிவார்டு 360 நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலருக்கும் உரிய பரிசு வவுச்சர்கள் தட்டிப்போகவே, நிறுவனத்தில் வரிசையாக முறையிட்டனர். எங்கோ தவறு நடந்திருப்பதை உணர்ந்த நிறுவனம், பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸாரை அணுகியது. சைபர் க்ரைம் போலீஸார் ஒரு சில ஹேக்கிங் வித்தகர்கள் உதவியுடன், இணையத்தில் ஆய்வு மேற்கொண்டு லட்சுமிபதியை ஆந்திர கிராமத்தில் அமுக்கினர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நன்றாக படித்து, வேலையிலும் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து வந்த லஷ்மிபதி, சீக்கிரம் வாழ்க்கையில் செட்டிலாகும் ஆசையாலும், தனது ஹேக்கிங் திறமையை எதிர்மறையாக பயன்படுத்தியதாலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

லட்சுமிபதி வசமிருந்து 5.26 கிலோ தங்கம், 25.25 கிலோ வெள்ளி, ரூ11.13 லட்சம் ரொக்கம்.. மேலும் ஏராளமான பைக்குகள், லேப்டாப், ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இவற்றுக்கு அப்பால், லஷ்மிபதியின் பிளிப்கார்ட் வாலட்டில் ரூ26 லட்சம், அமேசான் வாலட்டில் ரூ.3.50 லட்சம் இருப்பதை கண்டும் கிறுகிறுத்துப் போயுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in