ஆனந்த் சுப்பிரமணியம் கைது!

தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் சிபிஐ அதிரடி
தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியம் கைது (வட்டத்துக்குள் இருப்பவர்)
தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியம் கைது (வட்டத்துக்குள் இருப்பவர்)

தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் முன்னாள் நிர்வாகி ஆனந்த் சுப்பிரமணியம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா பங்குசந்தையில் பணியாற்றியபோது, சில முக்கிய தகவல்களை மெயில் மூலமாக இமயமலையில் உள்ள சாமியார் ஒருவருக்கு பகிர்ந்ததாக செபி நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சாமியாரின் உத்தரவில் பேரில் சித்ரா ராமகிருஷ்ணா பங்குசந்தையின் நிர்வாகியாக ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமனம் செய்து அவருக்கு பதவியை உயர்த்தி அதிகப்படியான சம்பளத்தை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து சாமியாருக்கு பல ரகசிய தகவல்களை அனுப்பியதாக கூறி செபி அமைப்பு சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் பங்குசந்தையில் பங்கேற்க தடை விதித்தது. இவர்கள் இருவரும் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதை அடிப்படையாக கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான மும்பை மற்றும் சென்னை இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து இந்த வழக்கானது மும்பை சிபிஐக்கு மாற்றப்பட்டது. மும்பை சிபிஐ கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் நிர்வாகி ஆனந்த் சுப்பிரமணியம் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் மும்பையில் சித்ரா ராமகிருஷ்ணாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தேசிய பங்கு சந்தை மோசடி வழக்கில் முன்னாள் நிர்வாகி ஆனந்த் சுப்பிரமணியத்தை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து மும்பை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆனந்த் சுப்பிரமணியத்தை மும்பைக்கு அழைத்து செல்ல உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in