
பாகிஸ்தான் அரசுக்கு உளவு பார்த்ததாக குஜராத்தில் முதியவர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவியாக தாராபூர் நகரைச் சேர்ந்த லப்சங்கர் மகேஸ்வரி (53) குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள தாராபூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் செல்போனை ஹேக் செய்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லப்சங்கர் மகேஸ்வரி குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் நீண்ட காலமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இவர், இந்தியாவில் உளவு பார்த்து தகவல்களைப் பாகிஸ்தானுக்கு வழங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரிகிறது.
மேலும் இவர், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்புவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இவர் பாகிஸ்தானுடன் என்ன தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட லப்சங்கர் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குஜராத் போலீஸாரிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குஜராத் ஏடிஎஸ் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட உள்ளது.