
தஞ்சையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இந்து எழுச்சி பேரவையின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் சாய்ரகு என்கிற ரகுராம் (39) இந்து எழுச்சி பேரவையின் தஞ்சை நகர தலைவராக உள்ளார். இவர் தஞ்சை - நாகை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது, பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்துடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினருக்கு தகவல் சென்றது.
இதனையடுத்து தஞ்சை தாலுகா போலீஸார் ரகுராமை கைது செய்தனர். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிரபல ரவுடிகள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி கைதாகி உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சையில் இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கைதாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.