ரூ.758 கோடி சொத்துகள் முடக்கம்: ஆம்வே இந்தியாவின் அசுர வளர்ச்சியின் பின்னணி என்ன?

ரூ.758 கோடி சொத்துகள் முடக்கம்: ஆம்வே இந்தியாவின் அசுர வளர்ச்சியின் பின்னணி என்ன?

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆம்வே நிறுவனம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தங்களது கிளைகளை நிறுவியுள்ளது. அமெரிக்க வழி விற்பனை என்பதன் சுருக்கமே ஆம்வே ஆகும். அழகுசாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சதுரங்க வேட்டை படத்தில் வருவதுபோல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் இந்நிறுவனத்தின் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராக சேர்ந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை தூண்டி லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி தங்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்துள்ளது.

இந்நிறுவனம் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை மூளைச்சலவை செய்து அதன்மூலம் சங்கிலி தொடர் போல் உறுப்பினர்களை சேர்த்து மோசடியில் ஈடுபட்டு் வந்தது. புதிய உறுப்பினர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தயாரிப்புகளை வாங்காமல், உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் பணக்காரர்களாக ஆக வேண்டுமென்ற ஆசையில் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளனர். இதனால் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை ஆந்திரா சிஐடி போலீஸார் கண்டுபிடித்துடன் கடந்த 2012-ம் ஆண்டு ஆம்வே நிறுவனத்தின் இந்திய கிளை சிஇஒ வில்லியம் பிங்கேனே மற்றும் இரண்டு இயக்குநர்களை கைது செய்தனர்.

இந்நிறுவனத்தின் மீது 1978-ம் ஆண்டு பரிசு சீட்டு மற்றும் தடை செய்யப்பட்ட பண சுழற்சி திட்டம் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணபரிமாற்றம் சட்டத்தின் கீழ் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்வே நிறுவனம், தங்கள் நிறுவன பொருட்களை நேரடி விற்பனை செய்யாமல், மல்டி-லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என்ற போர்வையில் இமாலய மோசடி செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அந்நிறுவனம் வழங்கும் பெரும்பாலான தயாரிப்புகளின் விலை மலிவானவை எனவும், உண்மைகளை அறியாத பொதுமக்கள், நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர தூண்டப்பட்டு, அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பிரமிடு திட்டம் மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில் ஒருவர் தனக்கு கீழ் உறுப்பினர்களை சேர்க்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் சில்வர், கோல்டு, பிளாட்டினம், டைமண்ட் ஆகிய திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இதில் முதல் நிலை உறுப்பினர்கள் பல்வேறு உறுப்பினர்களை சேர்த்து அதன் மூலம் கமிஷனாக கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததாக கூறி கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை ஆசை காட்டியதன் மூலம், சுமார் ஐந்து லட்சத்திற்கு மேலாக உறுப்பினர்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். ஆம்வே தன் சொந்தத் தயாரிப்பு என தெரிவித்து விநியோகித்த பொருட்கள் தரமற்றவையாக இருப்பதுடன், வணிக நிறுவனமாக பதிவு செய்து கொண்ட ஆம்வே நிறுவனம், ஆட்களை சேர்த்து மோசடி செய்வதில் முக்கியத்துவம் காட்டியது விசாரணையில் அம்பலமானது.

1996-97-இ 21 கோடி பங்குகளாக முதலீடு செய்த ஆம்வே நிறுவனத்தின் பங்கு தற்போது 2859 கோடி பங்கு எனவும், குறிப்பாக, 2002-03 முதல் 2021-22 வரை ரூ.27,562 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும், அதே இடைவெளியில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் விநியோகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ரூ.7,588 கோடியை கமிஷனாக வழங்கியுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, இயந்திரங்கள், வாகனங்கள், நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றை முடக்கியுள்ளது.

412 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள், 346 கோடி மதிப்புள்ள வங்கியில் உள்ள தொகை என நிறுவனத்திற்கு சொந்தமான 36 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in