இரவில் பின் தொடர்ந்த மர்ம கும்பல்... டூவீலரில் வந்த அமமுக நிர்வாகி படுகொலை: நெல்லையில் பயங்கரம்

இரவில் பின் தொடர்ந்த மர்ம கும்பல்... டூவீலரில் வந்த அமமுக நிர்வாகி படுகொலை: நெல்லையில் பயங்கரம்

திருநெல்வேலி குலவணிகர்புரத்தில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அமமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது தெற்குகாரசேரி. இந்தப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற மணி (41) திருநெல்வேலி, பாளையாங்கோட்டைப் பகுதியில் கார் உதிரிபாகங்கள் விற்பனையகம் ஒன்றை நடத்திவருகிறார். இதற்காக தினமும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வந்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால், பாளையாங்கோட்டை, குலவணிகர்புரத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வழக்கம்போல் நேற்று இரவு 10 மணிக்குக் கடையை அடைத்துவிட்டு தான் தங்கியிருந்த குடியிருப்புக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி என்ற மணி உயிர் இழந்தார்.

கருங்குளம் ஒன்றியத்தில் அமமுக நிர்வாகியாகவும் இருக்கிறார் சுப்பிரமணி. இதனால் அமமுக தொண்டர்கள் ஏராளமானோர் தகவல் அறிந்து குவிந்தனர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவரும் மேலப்பாளையம் போலீஸார், சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் நிலம் தொடர்பான ஒரு விசயத்தில் சுப்பிரமணிக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருப்பது தெரியவந்தது. அதனால் நிலத்தகராறில் இந்தக் கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. மேலும் கொலை நடந்த குலவணிகர்புரம் பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in