
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த தேர்தல் பிரச்சார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். தற்போதைய சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் நின்றபடி ஊர்வலம் சென்றார். குச்சமன், மக்ரானா, நாகவுர் உள்ளிட்ட பகுதிகளில் அமித் ஷா பிரச்சாரம் செய்தார். பாஜகவினர் ரதம் என கூறும் தேர்தல் பிரச்சார வாகனத்தில் நின்றபடி அமித் ஷா ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து அமித் ஷாவின் பிரச்சார வாகனம் பிடியாத் கிராமத்தில் இருந்து பர்பத்சர் எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று பிரச்சார வாகனம் மேல்பகுதியில் சென்ற மின்வயரில் உரசியது. இதனால் தீப்பொறி எழுந்து மின்கம்பி அறுந்து விழுந்தது. இதையடுத்து அமித்ஷா உள்பட அந்த வாகனத்தில் இருந்த அனைவரும் வேகமாக கீழே இறங்கினர்.
இதனால் அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. அமித் ஷா உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து அமித் ஷா வேறு பிரச்சார வாகனத்தில் ஏறி ஓட்டு சேகரிப்பை தொடங்கினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அஜ்மீர் மண்டல ஆணையர் மூலம் உள்துறை அமைச்சகமும் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!
தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!