‘பாஜகவில் இணைந்தாலும் தப்ப முடியாது’: ரௌடி மனைவியை கைது செய்த போலீஸார்

படப்பை குணா இல்லத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்
படப்பை குணா இல்லத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்

தலைமறைவாக இருக்கும் பிரபல ரௌடியான படப்பை குணா, காவல்துறை நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக ஒன்றிய கவுன்சிலரான மனைவி எல்லம்மாளை பாஜகவின் சேர வைத்தான். அரசியல் பின்புலம் அரவணைக்கும் என்ற குணாவின் கணிப்பை பொய்யாக்கிய போலீஸார், அவனது மனைவி உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் அதிகரித்திருக்கும் ரௌடியிசத்தை வேரறுக்கும் வகையில், அண்மையில் ஏஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான சிறப்புப் படை காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டது. பொறுப்பேற்ற வேகத்தில் இந்த சிறப்பு படையினர் சென்னை புறநகரில், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், தொழிலதிபர்களை மிரட்டியும், கட்டப்பஞ்சாயத்து செய்தும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் ரௌடிகளின் பட்டியலை சேகரித்தனர்.

இதற்கிடையே செங்கப்பட்டில் ரௌடிகள் குழுக்களுக்கு இடையிலான மோதலில் 2 பேர் வெட்டிக்கொல்லப்பட, அடுத்த நாள் காலையிலேயே அந்த கொலைகளை நிகழ்த்தியவர்களில் 2 ரௌடிகள் போலீஸாரின் என்கவுன்டருக்கு ஆளானார்கள். வெள்ளத்துரையின் ஆக்‌ஷன் ஆரம்பம் என்றதில், ரௌடிகள் பலரும் தலைமறைவானார்கள். அவர்களில் முக்கியமானவர்களை வளைக்க வெள்ளத்துரை அணி முடிவு செய்தது.

படப்பை குணா
படப்பை குணா

அவர்கள் முதலில் டிக் செய்தவர்களின் பட்டியலில் படப்பை குணா என்பவன் பெயர் இருந்தது. ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலத்தை சேர்ந்த குணா மீது 2 டஜனுக்கும் அதிகமான கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அப்படியொரு வழக்கில் சிறைகு சென்றவன் 4 மாதங்களுக்கு முன்னர், பிணையில் வந்தது முதல் தலைமறைவில் இருக்கிறான். காவல்துறையின் கறுப்பாடுகள் ஆசியுடனும், தன் கீழான ரௌடிப்படை உதவியுடனும் தனது வழக்கமான குற்ற சாம்ராஜ்ஜியத்தை தொடர்ந்து வருகிறான்.

குணா மனைவி எல்லமாளுடன் பொன்.ராதாகிருஷ்ணன்
குணா மனைவி எல்லமாளுடன் பொன்.ராதாகிருஷ்ணன்

வெள்ளத்துரை பொறுப்பேற்றதும், படப்பை குணா பாஜகவின் இணைய முயன்றான். ஆனால் தான் வெளியே வந்தால் கைது செய்ய காவல்துறை கைது செய்யக்கூடும் என்றதோடு, வெள்ளத்துரையின் துப்பாக்கிக்கும் வேலை வரலாம் என்றும் தெரிய வந்ததில் பதுங்கலை நீடித்தான். பின்னர் தனது மனைவியும் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியின் ஏழாவது வார்டு கவுன்சிலருமான மனைவி எல்லம்மாளை பாஜகவில் சங்கமிக்க செய்தான். ஆனபோதும், காவல்துறை குணாவை நோக்கி முன்னேறுவதை அவனது ஆதரவாளர்கள் உணர்ந்தனர். இதனையடுத்து ஜன.6 அன்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குணாவின் மதுரமங்கலம் வீட்டுக்கே வந்து, கட்சியில் சங்கமித்த எல்லம்மாளுக்கு சால்வை அணிவித்து சென்றார்.

இத்தனைக்கு பிறகும் அசராது காவல்துறை தற்போது குணா மனைவி எல்லாம்மாள் உள்ளிட்ட 5 பேர்களை கைது செய்து, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறது. இதனால் தலைமறைவாக இருக்கும் குணா, வெளிப்பட்டாக வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது. குணா போன்றவர்கள் மீதான அழுத்தம், சென்னை புறநகர் பகுதிகளில் தலைவிரித்தாடும் ரௌடியிசத்துக்கு எச்சரிக்கை மணியாக அமையும் என காவல்துறை கணிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in