
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கொடிக்கம்பம் அமைப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்தக் கொடிகம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களால் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
அப்போது ஜேசிபி வாகனம் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கானாத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா விளம்பரத்தில் இடம்பெற்ற மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடி படத்தை ஒட்டியது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். மேலும், வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!
அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!
அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!