ஒருவரை உயிரோடு எரித்துக் கொன்ற 49 பேருக்கு மரண தண்டனை: எங்கே? ஏன்?

கும்பல் வன்முறையின் கொடூர முகம்
பென் இஸ்மாயில் - அல்ஜீரிய காட்டுத்தீ
பென் இஸ்மாயில் - அல்ஜீரிய காட்டுத்தீ

அல்ஜீரிய நீதிமன்றம் ஒன்று, அப்பாவி ஒருவரை உயிரோடு எரித்துக்கொன்ற வழக்கில் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

வட ஆப்பிரிக்க தேசமான அல்ஜீரியாவில் கடந்த வருடம் ஆகஸ்டில் மூண்ட காட்டுத்தீயால் நாட்டுக்கே பெரும் அச்சுறுத்தல் எழுந்ததது. இந்த தீயில் சிக்கி 2 நாட்களில் சுமார் 90 உயிர்களை தேசம் பலி கொடுத்திருந்தது. இதன் பின்னணியில் தீயை சிலர் திட்டமிட்டு பரப்புவதாக ஒரு வதந்தி காட்டுத்தீயைவிட வேகமாக பரவியது. இவற்றில் மத்தியில் பென் இஸ்மாயில் என்ற நபர் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

காட்டுத்தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினருடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களும் கோரப்பட்ட நிலையில் தனது வசிப்பிடத்திலிருந்து தொலைவிலுள்ள காட்டுப் பகுதிக்கு பென் இஸ்மாயில் பயணப்பட்டார். அங்கே தீ அணைக்கும் பணியில் ஈடுபட முயன்ற அவரை, கும்பல் ஒன்று சந்தேகித்தது. காட்டுத்தீயை மூட்டிய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பென் இஸ்மாயிலை தாக்கத் தொடங்கியது. அந்த பகுதியில் அந்நியரான பென் இஸ்மாயிலுக்கு பரிந்து பேச ஆளில்லை. நல்ல வேளையாக தீயணைப்பு படைக்கு உதவியாக வந்திருந்த போலீஸார் பென் இஸ்மாயிலை காப்பாற்றி தங்களது வாகனத்தில் அமர்த்தினர்.

பென் இஸ்மாயில் மீது சந்தேகம் அடங்காத கும்பல் சிறிய இடைவெளியில் பெரும் படையாக திரும்பி வந்தது. போலீஸாரின் அரணையும் மீறி போலீஸ் வாகனத்திலிருந்து இஸ்மாயிலை இழுத்துப்போட்டு அடித்தது. இஸ்மாயிலின் வார்த்தைகளை பொருட்படுத்தாது அவரை துள்ளத்துடிக்க எரித்துக்கொன்றது. போலீஸார் உட்பட ஏராளமான மனித சாட்சிகள் மற்றும் கேமராக்கள் இதனை பதிவு செய்த போதும் கும்பல் வன்முறைக்கு இஸ்மாயில் அநியாயமாக பலியானார்.

காட்டுத்தீ பரவல் குறித்தும், அங்கு தான் தன்னார்வலராக செல்லவிருப்பது பற்றியும் தனது உளக்கிடக்கையை பென் இஸ்மாயில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்ததும் அல்ஜீரியா தேசம் வெட்கித் தலைகுனிந்தது. கும்பல் வன்முறை என்பதன் கூட்டு குணம் எப்படி செயல்படும் என்பதற்கு உதாரணமான இந்த கொடூர சம்பவத்தில், கிட்டத்தட்ட ஒரு கிராமமே கைதானது. தொடர்ந்து வழக்கு விசாரணைகளின் முடிவாக 49 நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தற்போது தீர்ப்பானது. மேலும் 28 நபர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

1993ஆம் ஆண்டுக்கு பிறகு மரண தண்டனைகளை காணாதிருந்த தேசத்தில் ஒரே வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அல்ஜீரியாவுக்கு அப்பாலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா உட்பட கும்பல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தேசங்களில் இவை பேசுபொருளாகி உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in