சென்னையில் பெற்ற தாயையே வெட்டிக் கொன்ற மகன்

குடிபோதையில் நடந்த கொடூரம்
சென்னையில் பெற்ற தாயையே வெட்டிக் கொன்ற மகன்
மூர்த்தி

மது அருந்தி விட்டு தகராறு செய்து, சாப்பாடு போட மறுத்த தாயை அரிவாள்மனையால் வெட்டிக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, வேளச்சேரி, நேருநகர், திரு.வி.க. தெருவில் வசித்து வருபவர் லட்சுமி(47). மது போதைக்கு அடிமையான இவரது மகன் மூர்த்தி(30) வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வருவதால் மூர்த்திக்கும், அவரது தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் முத்து, நேற்றிரவும் (செப்.19) குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாயிடம் சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிட்டுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து வெளியில் சென்றவர் மீண்டும் குடித்துவிட்டு போதையில் வந்தார். தனக்குப் பசி எடுக்கிறது, இன்னொரு முறை சாப்பாடு வேண்டும் என தாயிடம் கேட்டுள்ளார். சாப்பாடு தீர்ந்துவிட்டதாக லட்சுமி கூறியதை அடுத்து, மீண்டும் சமையல் செய்து தரும்படி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு லட்சுமி, ”நீ குடித்துவிட்டு வருவாய்... உனக்கு நான் சாப்பாடு சமைத்துப்போட வேண்டுமா?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. மகன் மூர்த்தி வீட்டிலிருந்த காய் வெட்டும் அரிவாள்மனையை எடுத்து, தாயின் வயிறு மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வருவதைப் பார்த்த மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார். லட்சுமி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அண்டைவீட்டார், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார் லட்சுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மூர்த்தியைத் தேடினர். இந்நிலையில், மூர்த்தி அதே பகுதியில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று மூர்த்தியைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.