திருநெல்வேலி பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பேட்டை அடுத்த மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜு (52). இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சி 18 வது வார்டு அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில் பார் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது வீரபாகு நகர் ரயில்வே சுரங்கப் பாதையில் இவரை எதிர்பார்த்து நின்றிருந்த மர்ம நபர்கள் சிலர் பிச்சை ராஜை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பிச்சைராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இது குறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் பிச்சைராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து, போலீஸார் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கொலை நடைபெற்றதா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடுரோட்டில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் அனிதா தலைமையில் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.