சக மனிதர் மீது சிறுநீர் கழித்து அதனை வீடியோ எடுத்து சுற்றுக்கு விட்டதாக, ஆக்ராவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது போதையில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். சக மனிதர் மீது சிறுநீர் கழிக்கும் அவச்செயலை புரிந்த அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அவருடைய வீட்டின் பகுதியளவு உடனடியாக இடிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் அண்மையில் அரங்கேறிய இதே அவலம், உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவிலும் ஏற்கனவே அரங்கேறி இருந்தது தற்போது வெளிப்பட்டிருக்கிறது. சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றதாக சொல்லப்படும் அந்த சம்பவத்தில், சக மனிதர் மீது சிறுநீர் கழித்தவர் மற்றும் அதனை படம்பிடித்தவர் ஆகியோரை ஆக்ரா போலீஸார் வளைத்துள்ளனர்.
சாலையோரம் காயங்களுடன் நினைவற்று கிடக்கும் நபர் மீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ திடீரென வைரலானது. இதனை ஆராய்ந்த ஆக்ரா போலீஸார், வீடியோவில் அடையாளம் காணப்பட்ட ஆதித்யா என்ற இளைஞரை கைது செய்தனர். அவர் சிறுநீர் கழித்த செயலை படம் பிடித்ததாக அடுஸ் என்ற இன்னொரு இளைஞரும் பின்னர் பிடிபட்டார். கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆதித்யா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆதித்யாவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் ஆக்ரா போலீஸார், இன்னொரு இளைஞரான அடுஸ் வசம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுநீர் கழிப்பு வீடியோவில் தென்படும் பாதிக்கப்பட்ட நபர் குறித்து ஆக்ரா போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக இதுவரை எவரிடம் இருந்தும், எந்த புகாரும் வரவில்லை என்றும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் ஆக்ரா துணை கமிஷ்னரான சூரஜ் ராய் தெரிவித்துள்ளார்.