தாயைக் கொலை செய்தவரை வெட்டிக்கொன்ற மகன்: 6 ஆண்டுகளாக காத்திருந்து பழி தீர்த்தார்!
பெங்களூருவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாயைக் கொலை செய்த நபரை அவரது மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனேக்கல் தாலுகா சாமனூரைச் சேர்ந்தவர் மது(37). இவரது தாயை நாராயணப்பா(56) என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாராயணப்பா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்து மண்டியாவில் வசித்து வந்தார்.
இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெங்களூரு வந்தவர், சாமனூரில் உள்ள மது வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாராயணப்பாவை மது நேற்று வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.
இதையடுத்து நாராயணப்பா உடலை மீட்ட அத்திபெலே போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.எல்.புருஷோத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.