சென்னை மயிலாப்பூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வெறிச்செயல்
சென்னை மயிலாப்பூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை
கொலைசெய்யப்பட்ட உருளை கோபி

சென்னை, மயிலாப்பூர் அப்பு தெருவைச் சேர்ந்தவர் உருளை கோபி (எ) கோபி (39). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், சமீபத்தில் மயிலாப்பூர் பகுதியில் கொலை செய்யப்பட்ட ரவுடி சிவகுமாரின் கூட்டாளி ஆவார். அதிமுகவில் உறுப்பினராக இருந்தவர். இந்த நிலையில், நேற்று இரவு கோபி அப்பு தெருவில் உள்ள ஆவின் பார்லர் அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், உருளை கோபியை ஓட ஓட கத்தியால் வெட்டிக் கொலை செய்தது.

இதில் உருளை கோபி, தலை சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலீஸார், கோபியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதும் ரவுடி கிழங்கு சரவணன், அழகு மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து கோபியைக் கொலைசெய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் ரவுடி மயிலை சிவக்குமார் இறந்த பின்பு, ரவுடிகளிடையே யார் பெரியவர் என்ற மோதலில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்துவருகிறது.

Related Stories

No stories found.