வேகமெடுக்கும் நடிகை கௌதமியின் புகார்! அழகப்பனுக்கு தொடர்புடைய இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை!

நடிகை கௌதமி
நடிகை கௌதமி

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரைத் தொடர்ந்து அழகப்பனுக்கு சொந்தமான மதுரை, காரைக்குடி உள்ளிட்ட 5 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சென்னை அடுத்து அக்கரை பகுதியில் வசித்து வருபவர் நடிகை கௌதமி. கடந்த 2004ம் ஆண்டு கௌதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தனக்கு சொந்தமான சொத்துகளை நிர்வாகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது கௌதமிக்கு நன்கு பழக்கமான அழகப்பன் என்பவர் சொத்துகளை விற்றுத் தருவதாக கூறியதால், அவருக்கு கௌதமி பவர் ஆஃப் அட்டார்னி செய்து கொடுத்துள்ளார்.

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் கௌதமியின் தாய் வசுந்தரா தேவி பெயரில் வாங்கப்பட்ட 46 ஏக்கர் சொத்துகளை விற்றுத் தருவதாக நம்பவைத்து அழக்கப்பன் போலியான ஆவணங்களை உருவாக்கி, நடிகை கையெழுத்தை போலியாக போட்டு சொத்தை அபகரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து நடிகை கௌதமி, அழகப்பன், அவரது மனைவி நார்ச்சல், மகன் சதீஷ்குமார், மருமகள் ஆர்த்தி, உறவினர் பாஸ்கர் மற்றும் ரமேஷ் சங்கர் ஆகியோர் தனது சொத்துகளை அபகரித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.

இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள 8.35 ஏக்கர் நிலம், திருவள்ளூர் கோட்டையூர் கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 29 சென்ட் நிலம் என மொத்தம் 25‌ கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிலத்தை அழகப்பன் அபகரித்துக்கொண்டதாக நடிகை கௌதமி மேலும் ஒரு புகார் அளித்தார்.

இரு புகார்களின் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள், உறவினர்கள் பாஸ்கர், சதிஷ்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் அழகப்பன் தொடர்புடைய 5 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். மோசடி செய்த அழகப்பனுக்கு மூத்த பாஜக தலைவர்கள் சிலர் உதவுவதாக கூறி நடிகை கௌதமி சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் விலகியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in