
நடிகை கௌதமியின் சொத்து அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 6 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்களை அபகரித்ததாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இந்நிலையில், கௌதமி அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அழகப்பன் உட்பட 6 பேரும் தலைமறைவாக இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாகவும் கௌதமி புகார் அளித்துள்ளார். கௌதமி சொத்துக்கள் வைத்திருக்கும் சில மாவட்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அழகப்பன் உள்பட சிலர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்த அழகப்பனுக்கு மூத்த பாஜக தலைவர்கள் சிலர் உதவுவதாக கூறி பாஜகவில் இருந்து இன்று கௌதமி விலகினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.