திருவள்ளுவர் பல்கலையில் முறைகேடா?: சென்னை ஐகோர்ட் திடீர் உத்தரவு

திருவள்ளுவர் பல்கலையில் முறைகேடா?: சென்னை ஐகோர்ட் திடீர் உத்தரவு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் தேர்வு கட்டுப்பாட்டாளர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பல்கலைக்கழக தேர்வு போன்ற ரகசியப் பணிகளைத் தனியாருக்கு விடுவதாகவும், பல்கலைக்கழக பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஊரிஸ் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில்,"பல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேடுகள் , நிர்வாக, நிதி முறைகேடுகள் நடப்பதாக பல்கலைக்கழக வேந்தர், உயர்கல்வித் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது புகார் மனுக்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும், பதிவாளருக்கும் அனுப்பி வைத்து, விசாரித்து அறிக்கை அளிக்க கேட்டுள்ளதாக உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளித்துள்ளார். யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோ, அவர்களிடம் விசாரித்து அறிக்கை அனுப்ப அரசு கேட்டுள்ளதாக" தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், " அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது புகார் மனுவை பரிசீலிக்கவும், முறைகேடுகள் சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு, இதுசம்பந்தமாக தமிழக அரசு விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 20- ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Related Stories

No stories found.