3.5 கோடி பணம், 60 சவரன் நகை பறிமுதல்: கவர்ச்சி விளம்பரத்தால் சிக்கிய ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குநர்கள்

3.5 கோடி பணம், 60 சவரன் நகை பறிமுதல்: கவர்ச்சி விளம்பரத்தால் சிக்கிய ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குநர்கள்

ஒரு லட்சம் முதலீடு செய்தால் 30 ஆயிரம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்ட் கம்பெனி இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், 3.5 கோடி பணம், 60 சவரன் நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளது. இந்நிறுவனம் நகை மீதான கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதத்திற்கு வட்டி தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்த கவர்ச்சி விளம்பரத்தை பார்த்து ஏராளமான பொதுமக்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் ஆர்.பி.ஐ அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்வதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ், செந்தில்குமார், ராஜசேகர், பட்டாபிராமன், மைக்கேல் ராஜ் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் ஆருத்ரா கோல்ட் டிரெடிங் கம்பெனிக்கு சொந்தமான சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதிக வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சோதனையில் 48 கம்ப்யூட்டர், 6 லேப்டாப், 44 மொபைல் போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார்கள், 3.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கடந்த ஒரு வருடங்களாக கவர்ச்சி விளம்பரங்களை வெளியிட்ட நிறுவனத்தின் இயக்குநர்களான பாஸ்கர் மற்றும் மோகன்பாபு ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள், மெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஆர்.பி.ஐ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in