
மத்தியபிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை இருவர் பைக்கில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்,அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி முடிந்து அங்குள்ள பெட்ரோல் பங்கில் தனது சகோதரருக்காக காத்திருந்துள்ளார். இந்த நிலையில், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், பெண்ணை பைக்கில் கடத்தி செல்கின்றனர்.
இதனை நேரில் பார்த்துக்கொண்டு இருந்தும் அங்கு இருக்கும் மக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. பைக்கை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்தபடியும் மற்றொரு நபர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டும் உள்ளார். கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோ போலீஸாரின் கவனத்திற்கும் சென்றது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.