தொழிலாளியை கூலிப்படை வைத்து கடத்திய வி.சி.க மகளிரணி நிர்வாகி: கடலூரில் பரபரப்பு

சுதா
சுதா

தனக்கு பணம் தர வேண்டிய  தச்சுத் தொழிலாளியை  கூலிப்படை வைத்து கடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி நிர்வாகி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர்  ஞானமணி (வயது 57) தச்சுத் தொழிலாளியான இவரை கடந்த 30-ம் தேதியன்று  ஒரு கும்பல் கடத்திச் சென்று அடித்து உதைத்து அவரிடம் இருந்த  ரூ.5 ஆயிரத்தை பறித்துச்சென்றது. இது குறித்து ஞானமணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த  ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட  மழவராயநல்லூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் தமிழழகன் (32),  குமாரக்குடி குளத்து மேட்டுத் தெருவை சேர்ந்த ரவி மகன் வேல்மணி(வயது 29)ஆகிய இருவரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள்  கட்சியின்  மகளிர் அணி துணைத்தலைவர் ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்த குழந்தைவேலு மகள் சுதா (வயது 41) என்பவர்  தான் கூலிப்படை வைத்து ஞானமணியை கடத்தினார் என்பது தெரியவந்தது. ஞானமணிக்கும் அவருக்கும்  இருந்த கொடுக்கல்,வாங்கல் தகராறு காரணமாக  கூலிப்படை மூலம் ஞானமணியை கடத்தியதும்,  இதற்கு ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் ரவி என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து சுதாவை போலீசார் கைது செய்தனர்.  மேலும் தலைமறைவான ரவி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 5000 ரூ  பணத்திற்காக கூலிப்படை வைத்து தொழிலாளியை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in