
குஜராத் மாநிலத்தில் டிராக்டர் திருடச் சென்ற இடத்தில், திருடன் மீது டிராக்டர் ஏரி இறங்கிய நிலையிலும், அசராமல் அதே டிராக்டரை திருடிச் சென்ற இளைஞன் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், மொடாசா என்ற இடத்தில் டிராக்டர் ஷோரூம் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன் இரவில் திருடன் ஒருவன் அங்கு வந்தான். ஷோரூம் காம்பவுண்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடுவதற்காக அவன் ஸ்டார்ட் செய்ய முயன்றான். நீண்ட நேரமாக ஸ்டார்ட் செய்ய முயன்றும் முடியவில்லை. அதனால் வண்டியின் பின்புற டயர் அருகில் வந்து கீழே நின்று கொண்டு ஸ்டார்ட் செய்ய முயன்றான்.
அதையடுத்து டிராக்டர் ஸ்டார்ட் ஆனது. தானாகவே நகரவும் ஆரம்பித்தது. வண்டியின் டயர் அருகில் நின்றதால் டிராக்டர் அவன் மீது மோதி, கீழே தள்ளியது. பின்னர், கீழே விழுந்த அவன் மேலே டிராக்டர் ஏறி இறங்கியது. ஆனால் ஆச்சர்மூட்டும் விதத்தில் அடுத்த நிமிடமே திருடன் மீண்டும் எழுந்தான்.
அதன் பின்னர் சாவகாசமாக டிராக்டரில் ஏறி அமர்ந்து வண்டியை சர்வசாதாரணமாக ஓட்டிச் சென்று விட்டான். இந்த காட்சிகள் அனைத்தும் ஷோரூமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் சாலை ஓரம் அனாதையாக நின்று கொண்டிருந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் டிராக்டரை திருடியவன் கைது செய்யப்படவில்லை. அவனை போலீஸார் தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.