பரபரப்பு... சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

பரபரப்பு... சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் செல்லும் நுழைவாயில் அருகே வாலிபர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் முதல் நுழைவாயில் ஆணையர் மற்றும் அதிகாரிகள் சென்று வருவதற்காக பயன்படுத்தபடுகிறது. இந்நிலையில் இன்று மதியம் முதலாவது நுழைவாயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தான் கையில் கொண்டு வந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஓடிச்சென்று அந்த நபர் மீது தண்ணீர் ஊற்றி பத்திரமாக மீட்டனர்.

பின்னர் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை பிடித்து வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அசோக்நகரை சேர்ந்த ஓவியகுமார் (42) என்பதும் இவரது தம்பி விஜயகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.‌ மேலும் ஓவியகுமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டியதுடன் காவலராக பணியாற்றி வரும் அவரது தம்பி விஜயகுமார் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த ஓவியகுமார் திடீரென தான் கையில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வேப்பேரி போலீஸார் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் செல்லும் நுழைவாயிலில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in