உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பாதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் பயணித்த 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் - மத்திய பிரதேச மாநிலம் சியோனி ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் பாதால்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பதாய் ரயில் நிலையத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 2 ரயில் பெட்டிகள் முழுமையாக தீயில் கருகி நாசமாகியுள்ளன.
ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். இதில் 10 பேர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பு தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணமும் இதுவரை கண்டறியப் படவில்லை. இந்த நிலையில் பாதால்கோட் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே விளக்கம் கொடுத்து உள்ளது.
அதில், "ஆக்ரா - தோல்பூர் இடையே சென்று கொண்டு இருந்த பாதால்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் இருந்து புகை வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரயில் இன்ஜினில் இருந்து 4 வதாக இருக்கும் ஜிஎஸ் பெட்டியில் இருந்து புகை வந்தது தெரிந்தது. உடனடியாக அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட கோச் மற்ற பெட்டிகளைவிட்டு பிரிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
3.45 மணியளவில் ஆக்ரா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றபோது லேசாக தீ விபத்து ஏற்படத் தொடங்கியது. தற்போது ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரயில் தீ விபத்து தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்து சம்பவம் பயணிகளை பீதி அடைய வைத்து உள்ளது.