
கடலூரில் தலைமறைவாக பதுங்கி இருந்த சென்னையைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேர் பாடிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி டேனியல் ராஜா (29). இவர் கடந்த 2019ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த அழகுமுருகன் என்பவரை வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கு தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸார் இவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதன்பின்னர் ஜாமீனில் விடுதலையான ரவுடி டேனியல், இவ்வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்த நிலையில், சில மாதங்களாக இந்த கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து டேனியலை கைது செய்து ஆஜர்படுத்தவேண்டும் என்று பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த டேனியல் ராஜா, காஞ்சிபுரத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விஷ்வாவின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் 2 கொலை மற்றும் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளது. திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளது, 2021ம் ஆண்டில் கதிர் ஆனந்த் எம்.பியின் வெளிநாட்டு காரை தீ வைத்து எரித்த வழக்கு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதுதவிர கடத்தல், வழிப்பறி உட்பட பல வழக்குகள் உள்ளது.
அதனால் அவரை போலீஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் கடலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து நேற்று அதிகாலை திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் தலைமையில் கொண்ட 10 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு விரைந்தனர்.
ரவுடி பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவர்கள் சுற்றி வளைத்தபோது போலீஸார் வருவதை அறிந்ததும் ரவுடி டேனியல் தப்பிக்க முயன்றார். ஆனால் அதிரடியாக செயல்பட்ட போலீஸார், துப்பாக்கி முனையில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதன்பின்னர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் ரவுடி டேனியலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.