கடற்கரையில் ரொமான்ஸ்... தவறி விழுந்த காதலி... காப்பாற்ற முயலாமல் தப்பியோடிய காதலன்!

மீட்கப்பட்ட இளம் பெண்
மீட்கப்பட்ட இளம் பெண்

தனிமையில், கடற்கரையில் இருந்த பாறைகளின் மேல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, தவறி பாறைகளுக்கு இடையே விழுந்து விட்ட  காதலியை காப்பாற்றாமல் காதலன் தப்பி ஓடிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 29-ந்தேதி  இளம்பெண் தன் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு  வெளியேறினார். 

மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலிபட்டணம் போலீசில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர். தன்னை நாடி வந்த தனது காதலியை அழைத்துக்கொண்டு கோபாலபட்டினம் சென்ற பனிந்திரா அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து, தங்கினார். நேற்று முன்தினம் பனிந்திராவும், அவரது காதலியும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர். 

அந்த கடற்கரையில் பாறைகளின் மீது உயரமான இடத்திற்கு சென்று இருவரும் அமர்ந்திருந்தனர். அந்த இடத்திற்கு கீழே பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. 

அதில் ராட்சத அலைகள்  சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு அலை வேகமாக வந்து மோதியதில், இளம்பெண் தவறி கீழே விழுந்தார்.  உயரமான இடத்தில் இருந்து விழுந்த அவர் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.

அலைகள் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துக் கொண்டிருந்ததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. மேலும் அப்போது இருட்டத் தொடங்கியது. இதனால் பயந்து போன பனிந்திரா தனது காதலியை  காப்பாற்ற எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.  பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் விடிய விடிய கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தார்.

அந்த இளம்பெண்
அந்த இளம்பெண்

அதிகாலை நேரத்தில் மீன் பிடிக்க வந்த  மீனவர்கள் இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு சென்று, பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை காயங்களுடன் மீட்டனர். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், இளம்பெண்ணை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில்  சேர்த்து விட்டது, நடந்த விபரங்களை இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிவித்தனர். 

கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தான் தவறி விழுந்து விட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் தனது காதலன் பனிந்திராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இளம்பெண் உறுதியாக கூறினார். 

காதலியை தவிக்க விட்டு, காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல், அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிய காதலன் பனிந்திராவை செல்போனில் தொடர்பு கொள்ள போலீஸார் முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. போலீஸார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in