அதிர்ச்சி... 6 வயது மகளைக் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை!

அதிர்ச்சி... 6 வயது மகளைக் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை!

சென்னையில் ஆறு வயது மகளைக் கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே இவரது மனைவியும், மூத்த மகளும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை அயனாவரம் பூசனம் தெருவைச் சேர்ந்தவர் கீதாகிருஷ்ணன்(50). இவர் அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்பனா என்ற மனைவியும் குணாலிஸ்ரீ, மானசா(6) என இரண்டு மகள்களும் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் கீதாகிருஷ்ணனை பார்ப்பதற்காக ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் லட்சுமிபதி வெகுநேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது கீதாகிருஷ்ணன் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கீதாகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது இளைய மகள் மானசா(6) படுக்கையில் அசைவின்றி இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

உடனே போலீஸார் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கீதாகிருஷ்ணன் தனது மகளை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் தற்கொலை செய்து கொண்ட கீதாகிருஷ்ணனுக்கு ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் சொந்தமாக வீடு ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு லீசுக்கு விடுவதாக கூறி ரூபாய் 2.50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்ட கீதாகிருஷ்ணன் தற்போது வரை அந்த வீட்டை லட்சுமிபதிக்கு கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் லட்சுமிபதி, தான் கொடுத்த இரண்டரை லட்ச ரூபாயை திருப்பி தருமாறு கீதாகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் கீதாகிருஷ்ணன் வீட்டையும் ஒப்படைக்காமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் நேற்று இரவு பணத்தை கேட்பதற்காக கீதா கிருஷ்ணன் வீட்டிற்கு வந்த போது அவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து போலீஸுக்கு தகவல் அளித்தது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு கீதாகிருஷ்ணன் கோட்டூர்புரத்தில் வசித்து வந்தபோது அவரது மனைவி கல்பனா மற்றும் மூத்தமகள் குணாலிஸ்ரீ ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டதும், இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் கீதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார், கீதாகிருஷ்ணன் கடன் தொல்லையால் மகளைக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மனைவி மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்பொழுது மகளை கொலை செய்து விட்டு தந்தையும், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in