
ஆந்திராவில் இருந்து நெல்லைக்கு காற்றாலை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெளிநாட்டுப் பயணி உட்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரியை பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த அப்ரோச் (வயது 27) ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அந்த லாரியானது திண்டிவனம் அடுத்த சாரம் அருகே வரும்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆரோவில் சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 3 பேரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக திண்டிவனம் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.