‘9 கிலோ தங்கத்தை அனுமதி பெற்றுத் தான் கொண்டு வந்தோம்’: சென்னை சுங்கத்துறையிடம் மல்லுக்கட்டும் இலங்கை பயணிகள்!


‘9 கிலோ தங்கத்தை அனுமதி பெற்றுத் தான் கொண்டு வந்தோம்’: சென்னை சுங்கத்துறையிடம் மல்லுக்கட்டும்  இலங்கை பயணிகள்!

துபாயிலிருந்து உரிய அனுமதியுடன் கொண்டுவரப்பட்ட 9 கிலோ தங்கத்தை கடத்தல் தங்கம் என கூறி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக்கூறி சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் அவர்களின் சொந்த நாட்டிற்குப் போகாமல் தர்ணா நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து ஜூன் 2-ம் தேதி சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தை விமானத்தில் இருந்தும், விமானநிலைய கழிவறையில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

ஆனால், சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் தங்கம் தங்களுக்கு சொந்தமானது என விமானத்தில் பயணித்த இலங்கை நாட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீது, இஸ்தான்ஹுல் ஹக், நஜுமுதின் முகமது சுக்கி, அமீருல் அசார், கொமு ஜல்ஜஹான் அப்துல்லா, நஜாத் ஹபிபுட்ஹம்பி, அனீஸ் அஜ்மல் ஆகியோர் தெரிவித்தனர். அத்துடன் இலங்கைக்குச் செல்லாமல் இன்று வரை சென்னை விமான நிலையத்தில் தங்கி தர்ணா நடத்தி வருகின்றனர்

குறிப்பாக துபாயில் உரிய அனுமதியுடன் தங்கக் கட்டிகளை வாங்கிக்கொண்டு இலங்கைக்கு செல்ல இருந்ததாகவும், இலங்கையின் தற்போதைய நிலவரம் காரணமாக நேரடியாக இலங்கை செல்வதற்கு விமானம் இல்லாததால் சென்னை வழியாக இலங்கை செல்ல திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவ்வாறு துபாயில் இருந்து கடந்த 2-ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்திலேயே வைத்து தங்களிடம் சோதனை மேற்கொண்டதாக தெரிவித்த அவர்கள், தாங்கள் வைத்திருந்த தங்கத்தையும், செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர் என்றனர். தங்கத்தை துபாயிலிருந்து கொண்டு வந்ததற்கான அனைத்து ஆவணங்களைக் காட்டியும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

இலங்கையில் தங்க வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுதொடர்பாக இலங்கை தூதரகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் தாங்கள் பயணித்த தனியார் விமான நிறுவனத்திடம் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றும், தங்களுடைய தங்கத்தை வாங்கிய பின்பு தான் இலங்கைக்குத் திரும்ப உள்ளதாகவும் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் நிலவிவரும் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி மத்திய சுங்கத்துறை அதிகாரிகள், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களிடம் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனை தொடர்ந்து நேற்று துபாயிலிருந்து வந்த முகமது பயாஸ் ஆதம்பாவா, இமிதியாஸ் மீராசாய்பு, முகமது அமீர் முகமது அஸ்பன், மீராசாகிப் ஃபிர்தியோஸ், முகமது பவ்ஹிஸ் முகமது இஸ்மாயில்,மீரா மொய்தின் முகமது சஃப்ரான் ஆகிய 6 இலங்கை நாட்டவரும், இவர்களுக்கு ஆதரவாக சென்னை விமான நிலையத்தில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 12 இலங்கை பயணிகளில் இரண்டு பேர் இலங்கை செல்வதற்கு ஒப்புதல் தெரிவித்து நாடு திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ள பயணிகள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே, இலங்கைத் திரும்புவதற்கானகு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "துபாயில் இருந்து வந்த விமானத்திலும், விமான நிலைய கழிவறையில் இருந்து தான் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுங்கத்துறை அதிகாரிகள் கூறியது போல் ஆவணமின்றி விமானம் மற்றும் விமான நிலைய கழிவறையில் தான் பறிமுதல் செய்யப்பட்டதா அல்லது அனுமதியோடு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இலங்கை நாட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யபட்டதா என்ற கேள்விகள் எழுப்பியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in