முகமூடி கொள்ளையர்களை பந்தாடிய முதியவர்!

முதியவர் வைரக்கண்ணு (82)
முதியவர் வைரக்கண்ணு (82)

திருவாரூர் அருகே வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 4 கொள்ளையர்களை துணிச்சலுடன் அரிவாளை கொண்டு 82 வயது முதியவர் விரட்டி அடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜம்புவானோடை வடகாடு கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (30), 5 வயது மகள், மாமனார் வைரக்கண்ணு (82) ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் பின்பக்கம் வழியாக முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள்ளே புகுந்தனர்.

வீட்டின் உள்ளே வந்த அவர்கள், ஜெயலட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். இதைக்கண்ட அவரது மாமனார் வைரக்கண்ணு, அதை தடுக்க முயன்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வைரக்கண்ணு, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்கள் நோக்கி வீசினார்.

இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் பெண்ணிடம் இருந்து பறித்த நகைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு அலறி அடித்தபடியே தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். பொதுமக்களிடம் சிக்காமல் அதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

கைதான கொள்ளையர்கள்
கைதான கொள்ளையர்கள்

இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக திருத்துறைப்பூண்டி அடுத்த கச்சலம் அம்மனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (26), ராஜேஷ் (22), கார்த்திக் ராஜா(23), சிவனேசன் (23) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

82 வயதில் துணிச்சலுடன் 4 கொள்ளையர்களை எதிர்கொண்டு நகைகளையும், உயிரையும் காப்பாற்றிக் கொண்ட முதியவர் வைரக்கண்ணுவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முத்துப்பேட்டை காவல் நிலையம்
முத்துப்பேட்டை காவல் நிலையம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in