பரபரப்பு... பல்லாவரம் அருகே தறிகெட்டு ஓடிய சொகுசு கார்; 7 பேர் படுகாயம்!

பரபரப்பு... பல்லாவரம் அருகே தறிகெட்டு ஓடிய சொகுசு கார்; 7 பேர் படுகாயம்!

சென்னை பல்லாவரம் அருகே அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொழிலதிபர் ஒருவர் அடையாறில் இருந்து தனது சொகுசு காரில் பல்லாவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். காரை கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் (28) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

திரிசூலம் சிக்னலில் இருந்து புறப்பட்ட போது, ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அசுர வேகத்தில், தறிகெட்டு ஓடிய கார் சென்னை விமான நிலையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

பின்னர் கார் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் பாய்ந்தது. இதில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை மற்றும் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநரான ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில், விபத்து ஏற்படுத்திய பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஆட்டோ மெட்டிக் கியர் மற்றும் அதிக பவர் உடையது என்று தெரியவந்துள்ளது. போதிய அனுபவம் இருந்தால்தான் இந்த காரை இயக்க முடியும். ஆனால், ஓட்டுநர் ரஞ்சித் இன்று முதல் முறையாக அந்த காரை இயக்கியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in