
உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிர் குழிப்பதுதான் உயிரிழந்துள்ளனர்..
ஹரியாணா மாநிலம் கிஸ்ஸாரிலிருந்து உத்தராகண்ட் மாநிலம், நைனிட்டால் நகருக்கு சுற்றுலாவிற்காக 33 பேர், பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். கலாதுங்கி சாலையில் நால்நீ என்ற இடத்தின் அருகே வந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்து குறித்து உடனடியாக மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் பேருந்தில் இருந்த 26 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய 5 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.