கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு... ஓய்வு பெற்ற நாளில் அதிகாரி சஸ்பெண்ட்: 8 போ் மீது வழக்கு!

கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு... ஓய்வு பெற்ற நாளில் அதிகாரி சஸ்பெண்ட்: 8 போ் மீது வழக்கு!

இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக சிவகங்கை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 9 போ் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம், பூதகுடி உள்ளிட்ட கிராமங்களில் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமரின் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 403 கழிப்பறைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பால்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி கண்ணன் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறையில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், "மொத்தம் 403 கழிப்பறைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 373 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 30 கழிப்பறைகளுக்கான பணத்தை போலி ஆவணங்கள் தயாா் செய்து கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறையினர் விசாரணை மேற்கொண்டனர். முறைகேட்டில் மறவமங்கலம் ஊராட்சி செயலா் முத்துக்கண்ணு மற்றும் 2015 முதல் 2019 வரை காளையாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலர்களாக பணியாற்றிய இளங்கோ, அமலோற்பவம், அன்புதுரை, ரமேஷ், செல்வராஜ், சந்திரா, நசீரா பேகம், தாயுமானவா் மற்றொரு இளங்கோ என 9 போ் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த 9 போ் மீதும் லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நசீரா பேகம், அன்புதுரை, அமலோற்பவம், செல்வராஜ், சந்திரா ஆகியோா் ஏற்கெனவே பணி ஓய்வு பெற்று விட்டனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ரமேஷ் சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் விடுப்பு மற்றும் பயிற்சி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அவர், நேற்றைய தினம் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in