உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாட்டால் ஏற்பட்ட அடிதடியில் 6 பேர் காயமடைந்தனர்.
ஆக்ரா அருகே உள்ள ஷம்சாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது.
இது தொடர்பாக ஷம்சாபாத் போலீஸார் கூறுகையில், 'கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிஜ்பன் குஷ்வாகா பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாடாக உள்ளதாக ஒரு நபர் கருத்து கூறியிருக்கிறார். இந்த விஷயம் திருமண நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களிடையே பரவி, எதிர்பாராதவிதமாக தகராறாக மாறியது. இதில் ஏற்பட்ட மோதலில் பகவான் தேவி, யோகேஷ், மனோஜ், கைலாஷ், தர்மேந்திரா, பவன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்' என்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எட்மட்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இனிப்பு வகை தட்டுப்பாட்டால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.