பகீர்... 3 ஆண்டுகளில் 500 சொகுசு கார்கள் திருட்டு...வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விற்ற 2 பேர் கைது!

சிக்கிய 2 கார் திருடர்களுடன் போலீஸார்.
சிக்கிய 2 கார் திருடர்களுடன் போலீஸார்.

இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சொசுகு கார்களைத் திருடி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நானா சிலோடா பகுதியில் ஒரு கும்பல் திருட்டு கார்களை விற்பதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற போலீஸார், அஷ்ரஃப் சுல்தான் காஜி(32), இர்பான் ஹாசன்(34) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் அல்கசார் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட 10 சொகுசு கார்களை போலீஸார் மீட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சொகுசு கார்களைத் திருடி மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சொசுகு கார்களை திருடியதாக அவர்கள் கூறியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பூட்டப்பட்ட கார்களை மடிக்கணினி மூலம் ரகசிய எண்களை மாற்றி அவர்கள் திருடிச் செல்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது
கைது

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், " சொசுகு கார்களைத் திருடும் இந்த கும்பல், திருட்டு வாகனங்களை ஏலம் விட அவற்றின் புகைப்படங்களை பல வாட்ஸ் அப் குழுக்களில் பரப்புவது வழக்கம். குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு அப்படி வந்த வாட்ஸ் அப் தகவல் மூலம் குற்றவாளிகள் இருவரும் ஒரு வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் காரை இலக்கின் காருக்கு அருகில் நிறுத்தி, அவர்களின் பாதுகாப்பை லேப்டாப் மூலம் ஸ்கேன் செய்து திருடுவார்கள். அப்படி திருடிய காரை 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

கார்களைத் திருட உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை வாடகைக்கு அமர்த்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பு, அவர்கள் இஞ்சின் மற்றும் சேஸ் எண்களை மாற்றுவார்கள். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக ஆர்டிஓக்களுக்கு என்ஓசி கடிதங்களைத் தயாரித்துள்ளனர்.

கார் விற்ற பணத்தை வசூலிக்க இர்பான் ஹாசன் நாடு முழுவதும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அதற்கான செலவுகளையும் வாடிக்கையாளர்களிடையே அவர் வசூலித்துள்ளார். டெல்லியில் நான்கு சக்கர வாகனங்களைத் திருடியதாக அஷ்ரஃப் சுல்தான் காஜி மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றனர்.

கார் திருடும் பெரிய நெட்வொர்க் கும்பலில் இருவர் சிக்கியுள்ளது குஜராத் குற்றப்பிரிவு போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களைப் பிடிக்க குற்றப்பிரிவு போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடக்கியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in