சென்னையில் நேற்று 3 சாலை விபத்துகள்: 5 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

சென்னையில் நேற்று 3 சாலை விபத்துகள்: 5 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

சென்னை, தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் வலப்புறம் இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐசக்ராஜ் (51), உத்திரமேரூரைச் சேர்ந்த சுந்தரராஜன் (37), பாண்டிச்சேரியைச் சேர்ந்த நாகமுத்து (36) ஆகிய 3 பயணிகள் நிகழிடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், ஆட்டோவில் பயணித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஏழுமலை (65), ஆனந்தகுமார் (27), பெருங்களத்தூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் (45) ஆகிய 3 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் படுகாயமடைந்த ஏழுமலை, ஆனந்தகுமார், ரஜினிகாந்த் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் உயிரிழந்த ஐசக்ராஜ், சுந்தரராஜன், நாகமுத்து, ஆகிய 3 பேரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து போலீஸார் நடத்திய விசாரணையில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் அதிவேகமாக ஆட்டோவை ஓட்டி வந்தபோது விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


இதேபோல் நேற்று இரவு சென்னை, வேளச்சேரி மேடவாக்கம் சாலை சந்திப்பில் நடந்து சென்ற இருவர் மீது, இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் தனியார் நிறுவன ஊழியர் விஜயமுருகன் (22) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நாகராஜ் (21) சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். விசாரணையில் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் புருஷோத்தமன் (24) குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை, கொடுங்கையூர் டிஎச் சாலை, திருவிக நகர் சந்திப்பு அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் சென்ற முகமதுஜாகீர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவுசெய்த கொடுங்கையூர் போக்குவரத்து போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.