ரயில்வே பணம் ரூ.30 கோடியை வங்கியில் முதலீடு செய்து முறைகேடு - 5 பேரை கைது செய்தது சிபிஐ

சிபிஐ
சிபிஐ

ரயில்வே துறையின் பணத்தை வங்கியில் முதலீடு செய்ததில், ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வங்கி தலைமை அதிகாரி உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் அமைப்புகளில் ஒன்று ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம். ஆர்.எல்.டி.ஏ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் மூலமாக ரயில்வேவிற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தின் பணம் 35 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைக்க டெல்லியில் உள்ள பேங்க் ஆப் பரோடாவின், விஸ்வாஸ் நகர் கிளையில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 35 கோடியில் 3.50 கோடி ரூபாயை மட்டும் வைப்பு தொகையாக வைத்துக்கொண்டு மீதமுள்ள 31.50 கோடி ரூபாயை வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாற்றி விட்டதன் மூலம் மோசடி நடைபெற்று இருப்பதாக ஆர்.எல்.டி.ஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன் காரணமாக ஆர்.எல்.டி.ஏவிற்கு சுமார் 30 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எல்.டி.ஏ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பேங்க் ஆஃப் பரோடா வங்கி

இதில் வங்கியின் கிளை மேலாளர் ஜஸ்வந்த் ராய், ஆர்.எல்.டி.ஏவின் மேலாளர் விவேக் குமார் உட்பட 5 பேர் மோசடியாக பணத்தை வேறு போலி நிறுவனங்களுக்கு மாற்றி ஆதாயம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்துள்ள சிபிஐ, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக டெல்லி, மும்பை, கோவா மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று போலி நிறுவனங்களின் பேரில் இந்த பணத்தை மோசடியாக பயன்படுத்தி இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in