பைக் மீது கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு

பிறந்தநாளுக்குப் புத்தாடை வாங்கச் சென்றபோது நேர்ந்த விபத்து
பைக் மீது கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த சிறுமி சாய் தன்ஷிகா

சென்னை, ராயப்பேட்டை சைவமுத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன்(42). இவர், அதே பகுதியில் துணி இஸ்திரி செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், பார்கவ் (6) என்ற மகனும், சாய் தன்ஷிகா (4) என்ற மகளும் உள்ளனர். குழந்தை சாய் தன்ஷிகாவுக்கு அடுத்த மாதம் பிறந்தநாள் வருவதையொட்டி, அவருக்குத் துணி எடுக்க வேண்டி நேற்று முன்தினம் (செப். 13) ஜெயராமன் தனது குடும்பத்துடன் தியாகராய நகருக்கு பைக்கில் சென்றார்.

விபத்தை ஏற்படுத்திய கார்
விபத்தை ஏற்படுத்திய கார்

தியாகராய சாலை சந்திப்பு அருகே சென்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த சொகுசுக் கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற 4 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயராமனுக்கு வலது காலில் காயமும், பின்னால் அமர்ந்து வந்த மகன் பார்கவுக்குக் கை, காலில் லேசாக சிராய்ப்புக் காயமும், மனைவி சித்ராவுக்கு தலையின் இடதுபக்கம் ரத்தக் காயமும் ஏற்பட்டது.

சிறுமி சாய் தன்ஷிகாவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சாய் தன்ஷிகா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்விபத்து குறித்து பாண்டிபஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பாக கார் ஓட்டுநரைப் போலீஸார் கைதுசெய்தனர். ஆனால், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்குப் பதிலாக, வேறொரு நபரை ஆள்மாறாட்டம் செய்து கைது செய்ததாகப் போலீஸார் மீது சாய் தன்ஷிகாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அஜய் சுப்பிரமணியன் என்பவரைப் போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.