அதிர்ச்சி... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

பல்லடம் அருகே மீண்டும் 4 பேருக்கு அரிவாள் வெட்டு
பல்லடம் அருகே மீண்டும் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூர் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் பல்லடம் பகுதியில் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்பவர் தனது முதல் கணவரை விட்டு பிரிந்து கணேசமூர்த்தி என்பவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே.என்.புரத்தில் வசித்து வருகிறார். இருவரும் தள்ளுவண்டி கடை ஒன்றில் பலகாரம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

பல்லடம் அரசு மருத்துவமனை
பல்லடம் அரசு மருத்துவமனை

இந்நிலையில் நேற்று மாலை தள்ளுவண்டி கடையில் இருவரும் பலகாரம் சுட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாரீஸ்வரியின் முதல் கணவரின் மகன் புஷ்பராஜ் (30) என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரீஸ்வரியையும், கணேசமூர்த்தியையும், சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்போது தள்ளுவண்டி கடை அருகே நின்று கொண்டிருந்த கணேசமூர்த்தியின் தம்பி ரமேஷ், என்பவர் ஓடி வந்து புஷ்பராஜ் தடுத்து அவரிடமிருந்து அரிவாளை பிடுங்கி உள்ளார். அப்போது இருவரும் ஒருவரைஒருவர் வெட்டிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் மாரீஸ்வரி, கணேசமூர்த்தி, ரமேஷ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய 4 பேருக்கும், உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீஸார் அரிவாளை பறிமுதல் செய்ததோடு, 4 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் மாரீஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்ட சம்பவம், பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in