போலி சிற்பங்களை வைத்துவிட்டு கும்பகோணத்தில் திருடப்பட்ட 4 சிலைகள்: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

போலி சிற்பங்களை வைத்துவிட்டு கும்பகோணத்தில் திருடப்பட்ட 4 சிலைகள்: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

கும்பகோணம் சௌந்தர்ராஜன் பெருமாள் கோயிலில் இருந்த 13 ம் நூற்றாண்டை சேர்ந்த 4 சிலைகளை திருடி விட்டு அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட நான்கு சிலைகளில், மூன்று சிலைகள் அமெரிக்காவிலும், ஒரு சிலை லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தில் இருக்கும் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த திருமங்கை ஆழ்வார் சிலை திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலி சிலை கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 ம் ஆண்டு அக்கோவில் செயல் அலுவலர் ராஜா புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ-பிரஞ்ச் நிறுவனத்திடம் உள்ள புகைப்படங்களை வைத்து சோதனை நடத்திய போது, 1967ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஜே.ஆர் பெல்மாண்ட் என்பவரிடமிருந்து 850 டாலர் கொடுத்து லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகம் அந்த சிலையை வாங்கியது தெரியவந்தது. மேலும் கோயிலில் உள்ள திருமங்கையாழ்வார் சிலை போலியானது எனவும், கோயிலில் உள்ள உண்மையான சிலை திருடப்பட்டு, லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதை கடந்த 6 மாதத்திற்கு முன் போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு சந்தேகம் அடைந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோயிலில் உள்ள அனைத்து சிலைகளையுமே சோதனை நடத்திய போது காளிங்கநார்த்தன் கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பழங்கால சிலைகளும் கோயிலில் இருந்து திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலியான சிலை வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் காளிங்கநார்த்தன் கிருஷ்ணன் சிலை, அமெரிக்காவில் உள்ள ஆசிய சிலை அருங்காட்சியகம் சான்பரான்சிஸ்கோவிலும், விஷ்ணு சிலை, கிம்பல் அருங்காட்சியகம் டெக்ஸாஸ்சிலும், ஸ்ரீதேவி சிலை ஃப்ளோரிடாவில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 13 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த இந்த சிலைகளை

உள்துறை அமைச்சகத்தின் மூலமாக அமெரிக்கா மற்றும் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in