புலியை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை விற்க முயற்சி: 4 பேர் கைது

புலியை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை விற்க முயற்சி: 4 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் புலியை வேட்டையாடி அதன் தோல் மற்றும் நகங்களை விற்க முயன்ற நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புலி வேட்டை தொடர்பாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பஹ்மனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோயிலுக்கு அருகே நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து புலியின் தோல், அதன் நகங்கள் மற்றும் காட்டுப் பன்றியின் நான்கு பற்கள் கைப்பற்றப்பட்டதாகக் காவல் துணைப் பிரிவு அதிகாரி அகன்ஷா சத்ருவேதி தெரிவித்தார். மேலும், அவர்களிடமிருந்து விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்திய சில கம்பிகள் மற்றும் கோடரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின்போது, ​​மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு பல்வானி வனப்பகுதியில் கம்பிகளைப் பயன்படுத்தி ஒரு புலியை அவர்கள் வேட்டையாடியதும், அந்தப் புலியின் உடல் பாகங்களை விற்பதற்கு அவர்கள் முயற்சி செய்ததும் தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்ட அவர்கள் மீது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அகில இந்திய புலிகள் மதிப்பீட்டு அறிக்கை 2018-ன் படி, மத்திய பிரதேசத்தில் மொத்தம் 526 புலிகள் உள்ளன. நாட்டிலேயே அதிகளவில் புலிகள் உள்ள மாநிலமாக இது உள்ளது. மத்திய பிரதேசத்தில் கன்ஹா, பாந்தவ்கர், பென்ச், சத்புரா மற்றும் பன்னா உள்ளிட்ட பல புலிகள் காப்பகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோதமாகப் புலிகள் வேட்டையாடப்பட்டு அவற்றின் உடல்பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக வன உயிர் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in