
மத்தியப் பிரதேசத்தில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் உள்ள நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் கிராமத்தினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக குளத்தில் கரைக்க கொண்டு சென்றனர்.
அந்த ஊரில் உள்ள குளத்தில் சிலைகளைக் கரைக்கும் போது, எதிர்பாராத விதமாக 7 சிறுவர், சிறுமிகள் நீரில் மூழ்கினர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் 3 சிறுவர்களை மீட்டனர். எனினும் 3 சிறுமிகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.