ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் கருகி உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டம், உக்ரால் தொகுதியை சேர்ந்தது தன்மஸ்தா - தாஜ்னிஹால் கிராமம். இங்குள்ள சில வீடுகளில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சகோதரிகளான பிஸ்மா (18), சைகா (14), சானியா (11) ஆகிய 3 பேர் தீயில் சிக்கிக் கொண்டதால் அவர்களால் வெளியேற முடியவில்லை. அவர்கள் மூவரும் தீயில் கருகி துடிதுடித்து உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் காவல் துறையினர் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தீ மற்ற வீடுகளுக்கு அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ஜம்மு பிராந்தியத்தின் ராம்பன் குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, இதில் மூன்று சகோதரிகள் உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் முயன்ற போதும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவரவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.