அமைச்சர் ரோஜாவின் உதவியாளரை கொலை செய்ய முயற்சி... விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்!

கைது செய்யப்பட்டுள்ள நவீன், சிரஞ்சீவி, பரசுராம்
கைது செய்யப்பட்டுள்ள நவீன், சிரஞ்சீவி, பரசுராம்

ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜாவின் உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மூவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் நடிகை ரோஜா. இவரது உதவியாளர் பிரதீஷ் என்பவர், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் நகரி பகுதியில் பிரபல கம்பெனியின் டயர் விற்பனை ஷோரூம் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த 2-ம் தேதி காலை நடை பயிற்சி செய்ய பிரதீஷ், வீட்டைவிட்டு வெளியே சென்ற போது, ரயில்வே தண்டவாளம் அருகே முகமூடி அணிந்த மூன்று நபர்கள் அவரை படுகொலை செய்யும் நோக்கில் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அமைச்சர் ரோஜாவுடன் உதவியாளர் பிரதீஷ்
அமைச்சர் ரோஜாவுடன் உதவியாளர் பிரதீஷ்

பிரதீஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், விரட்டியதால் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் கால்கள் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்த பிரதீஷ் மீட்டகப்பட்டு, சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைத்து, திருத்தணி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது அரசியல் காரணமா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

படுகாமடைந்த பிரதீஷிற்கு தீவிர சிகிச்சை
படுகாமடைந்த பிரதீஷிற்கு தீவிர சிகிச்சை

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் நகரி தொகுதிக்குட்பட்ட நவீன் (31), சிரஞ்சீவி (24), பரசுராம் (39) ஆகிய 3 பேரை திருத்தணி போலீஸார் தீவிரமாக விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.

ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பானு பிரகாஷ் ரெட்டி என்பவர் போட்டியிட்டு உள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரோஜா வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

திருத்தணி காவல் நிலையம்
திருத்தணி காவல் நிலையம்

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் பானு பிரகாஷ் ரெட்டி, அமைச்சர் ரோஜாவிற்கு எதிராக பேட்டி அளித்திருந்த நிலையில், ஒய்எஸ்ஆர் ,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பானு பிரகாஷ் ரெட்டியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கார் சேதமடைந்ததை அடுத்து, நகரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ரோஜாவின் உதவியாளராக இருந்து வந்த பிரதீஷ் முக்கிய நபராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரதீஷ் உயிருடன் இருந்தால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் ரோஜாவை தோற்கடிக்க முடியாது என நகரி மண்டல இளைஞர் அணி தலைவர் சிட்டிபாபு என்பவர் இளைஞர் அணி ஒன்றிய தலைவராக உள்ள நவீனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரதீஷை கொலை செய்ய முடிவு செய்த நவீன் தரப்பினர், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 3 நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி சதித்திட்டத்தை தீட்டி உள்ளனர். பிரதீஷை கொலை செய்யும் நோக்கோடு தாக்கிய நிலையில், அவர் சத்தமிட்டதால் கூட்டம் கூடியதையடுத்து, அச்சத்தில் அங்கிருந்து தப்பிச் சென்ற மூவரும், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடிச் சென்று கைது செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மூவரையும் கைது செய்துள்ள போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார், தலைமறைவாக உள்ள சிட்டிபாபுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் காலத் தகராறு காரணமாக அமைச்சரின் உதவியாளரை கொலை செய்ய நடந்த முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in