அதிர்ச்சி... கோவை அருகே ரயில்களைக் கவிழ்க்க சதி... உ.பியைச் சேர்ந்த 3 பேர் கைது!

ரயில்
ரயில்

கோவை அருகே ரயில்வே போலீஸார் மீது இருந்த கோபத்தில்  ரயில்களைக் கவிழ்க்க, தண்டவாளங்களில் கற்களை வைத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

கேரளாவிலிருந்து போத்தனூர் நோக்கி சரக்கு ரயில் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்துகொண்டிருந்தது. அப்போது  சிட்கோ ரயில்வே மேம்பாலத்திற்கு சிறிது தூரத்துக்கு  முன்பாக ஏ லைனில் சுமார் மூன்றடி நீளமுள்ள மைல்கல் மற்றும் மெட்டல் கற்கள் இருப்பதை ரயில் ஓட்டுநர் பார்த்துள்ளார். அதையடுத்து உடனடியாக போத்தனூர் ரயில் நிலைய அதிகாரிக்கு  தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது தகவலையடுத்து உடனடியாக அங்குசென்ற  டிராக்மேன் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினார். அப்போது அப்பாதையில் காரைக்காலிலிருந்து, எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த  டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ரயில்,  இதற்காக 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின், புறப்பட்டுச் சென்றது.

அதன்பின்னர் மங்களூருவிலிருந்து சென்னை நோக்கி அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், போத்தனூர் ரயில் நிலைய அதிகாரியிடம் மேற்குறிப்பிட்ட கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சுமார் ஒரு கி.மீ., முன்பாக, ரயிலின் சப்தம் வேறுபட்டதாக கூறி சென்றார். இதையடுத்து  போத்தனூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அங்கும் தண்டவாளத்தில் எளிதில் உடையும் வகையிலான கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதையடுத்து போலீஸார் தீவிர  விசாரணையில் ஈடுபட்டனர். அதில் மதுக்கரை மார்க்கெட் ரோடு, ரயில்வே மேம்பாலம் பகுதியில் தங்கியுள்ள, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ்(21), ஜூகல்(19), பப்லு(31) ஆகியோர் தான் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைத் தவிர்க்க சதி செய்தது தெரியவந்தது.  

ரயில்
ரயில்

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிப்.10-ம் தேதியன்று மூவரும் ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்கள் மூவருக்கும், அபராதம் விதித்துள்ளனர். அதனால்   ஆத்திரமடைந்த மூவரும் மதுபோதையில்  ரயிலைக் கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தண்டவாளத்திற்கு வந்து ஏ லைனில் கற்களை வைத்துவிட்டு, அங்குள்ள புதர் பகுதியில் ஒளிந்திருந்து, ரயில் வருகிறதா என பார்த்துள்ளனர்.

ஆனால், அந்த லைனில் வராமல்   பி லயனில் சரக்கு ரயில் சென்றது. ஆனாலும் அந்த ரயிலின் ஓட்டுநர் அடுத்த தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கற்களைப் பார்த்து நிலைய அதிகாரி தகவல் கூறியதால், கற்கள் அகற்றப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள்  தொடர்ந்து ஒரு கி.மீ. தூரம் சென்று, பி லைனில் கற்களை வைத்ததும் தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in