தகாத உறவால் 3 கொலைகள்... 20 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய முன்னாள் கடற்படை வீரர்!

பாலேஷ் குமார்
பாலேஷ் குமார்

டெல்லியில் தகாத உறவால் 3 கொலைகள் செய்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர், இறந்துவிட்டதாக நாடகமாடி 20 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

டெல்லியில் பாவனா பகுதியை சேர்ந்தவர் பாலேஷ் குமார். கடற்படையில் ஊழியராக பணியாற்றிய இவருக்கும், இவரின் உறவினரான ராஜேஷின் மனைவிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த சூழலில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ராஜேஷை படுகொலை செய்துள்ளார் பாலேஷ்.

இந்த வழக்கில் போலீஸிடமிருந்த பக்காவாக திட்டம்போட்ட பாலேஷ், லாரி ஒன்றில் ராஜஸ்தானுக்கு தப்பினார். அதன்பின் லாரியை தீ வைத்து எரித்து விட்டு, தொழிலாளர்கள் 2 பேரையும் எரித்து கொலை செய்து விட்டார். அதில் இறந்த ஒரு தொழிலாளி தான் என்பதை நம்பவைக்கும் சில அடையாளங்களையும் பாலேஷ் உருவாக்கினார். எனவே இதுபற்றி விசாரணை நடத்திய ராஜஸ்தான் போலீசார், இறந்த 2 பேரில் ஒருவர் பாலேஷ் என்று அடையாளம் கண்டனர். மற்றொருவர் யாரென தெரியவில்லை. இதேபோன்று பாலேஷின் குடும்பத்தினரும் உடல்களில் ஒன்றை பாலேஷ் என அடையாளம் காட்டினர். இதனால், ராஜேஷ் கொலை வழக்கின் சந்தேகத்திற்குரிய முக்கிய நபர் உயிரிழந்து விட்டார் என வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கொலை
கொலை

இந்த போலியான மரணத்திற்கு பின் பஞ்சாப்புக்கு தப்பிய பாலேஷ், குடும்பத்தினரின் உதவியுடன் அமன் சிங் என பெயர் மாற்றம் செய்து, போலியான அடையாள அட்டையை பெற்றுள்ளார். அதன்பின்னர் மனைவியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டு, காப்பீட்டு பலன்கள், இந்திய கடற்படையின் ஓய்வூதியம் ஆகியவற்றை மனைவிக்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்து தந்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய லாரி, பாலேஷின் சகோதரர் மஹிந்தர் சிங் பெயரில் பதிவாகி உள்ளது. அதற்கான காப்பீட்டு தொகையும் பெற்றுள்ளார் பாலேஷ். 20 ஆண்டுகளாக அமன் சிங் என்ற வேறு பெயரில் டெல்லியின் நஜப்கார் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் பாலேஷ்.

இந்நிலையில், உளவு தகவலின் அடிப்படையில் பாலேஷை போலீசார் கைது செய்தனர். அவருடைய மனைவிக்கு குற்ற சம்பவத்தில் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது. அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 8-ம் வகுப்பு வரை படித்த பாலேஷ், 1981-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்ந்து 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 40 வயதாக இருந்தபோது 3 கொலைகளை செய்த பாலேஷ், 20 ஆண்டுகள் கழித்து 60 வயதில் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in