வேப்பம்பட்டில் பயங்கரம்... ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி; ஆவேசத்தில் பொதுமக்கள் மறியல்!

ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி
ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி

வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, தண்டையார்பேட்டை மார்க்கமாக சூலூர்பேட்டை வரை மின்சார ரயிலும் அதேபோல் பெரம்பூர், வில்லிவாக்கம், வேப்பம்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரை மின்சார ரயிலும், சென்னை கடற்கரை மார்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த புறநகர் ரயில்களில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. இப்படித்தான் ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

அண்மையில் அரக்கோணம் அருகே புறநகர் ரயிலில் பயணித்த பெண் ஒருவரிடம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அதுபோல் ரயில் விபத்துகளும் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், சேத்துப்பட்டு மற்றும் பெரம்பூர், வில்லிவாக்கம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. உயிரிழப்பை தடுக்க ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை. பொதுமக்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

பல ரயில் நிலையங்களில் மேம்பாலங்களோ, சுரங்கப்பாதையோ கிடையாது. இதனால் தண்டவாளத்தை கடந்துதான் மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி தண்டவாளங்களை கடக்கும்போது பொதுமக்கள் ரயிலில் அடிப்பட்ட உயிரிழக்கின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி
ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெருமாள்பட்டு எஸ்விநகரை சேர்ந்த மனோகர் என்பவர், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அவருடன் 17 வயதான மகள் தர்ஷினி மற்றும் 19 வயது மகள் தாரணியும் உடன் சென்றுள்ளனர். தர்ஷினி பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். தாரணி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள், நேற்று காலை தனது தாயாரை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல வந்துள்ளனர். தண்டவாளப்பணி காரணமாக வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் நேற்று அனைத்து புறநகர் ரயில்களும் எக்ஸ்பிரஸ் பாதையில் மாற்றிவிடப்பட்டது.

அப்போது, எதிர்முனையில் உள்ள பிளாட்பாமிற்கு செல்ல தண்டவாளத்தை அவர்கள் கடக்க முயன்றபோது சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த புறநகர் ரயில் பகுதியில் ரயில் மோதி 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். மனோகரின் உடல் 100 தூரத்துக்கு வீசப்பட்டு தண்டவாளத்தில் கிடந்தது. தகவல் அறிந்து பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதே நேரத்தில் உடலை எடுக்க 108 ஆம்புலன்ஸ் வந்தது. அந்த உடல்களை எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து பொதுமக்கள் திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக போராட்டம் கைவிடப்பட்டது.

ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி
ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி

கிடப்பில் கிடக்கும் மேம்பாலம், சுரங்கப்பாதை பணிகள்!

வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பால பணிகள் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அந்தப் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மேம்பால பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி நிறைவடைந்த பிறகும் மேம்பால பணி தொடங்கப்படவில்லை. அதே நேரத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சுரங்கப்பாதை பணியும் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்பவர்கள் அந்த சுரங்கப்பாதையில் மூழ்கி உயிரிழக்கும் நிலையில் ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பாக சுரங்கப்பாதை பணியை ரயில்வே நிர்வாகமும், தமிழக அரசும் செய்து முடித்து தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேம்பால பணிகளை முடிக்காமல் அலட்சியமாக இருக்கும் ரயில்வே துறைக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in