தடுத்து நிறுத்திய அதிகாரிகள்... நிற்காமல் சீறிப் பாய்ந்த லாரிகள்: மீட்கப்பட்டது 26 டன் ரேசன் அரிசி!

தடுத்து நிறுத்திய அதிகாரிகள்... நிற்காமல் சீறிப் பாய்ந்த லாரிகள்: மீட்கப்பட்டது 26 டன் ரேசன் அரிசி!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கட்டி பகுதியில் சீறிப்பாய்ந்த லாரிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். நிற்காமல் சென்ற லாரிகளை விரட்டிப் பிடித்ததில் 26 டன் ரேசன் அரிசி மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேசன் அரிசி தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் குமரியில் இருந்து கேரளா செல்லும் 30க்கும் அதிகமான பாதைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக நடந்துவருகின்றது. போலீஸார் மட்டுமின்றி வருவாய்த்துறையினரும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் நூதன முறையில் கடத்தல்கள் தொடர்வதும், அவ்வப்போது சிக்குவதுமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் தமிழக, கேரள எல்லையோரப் பகுதியான தமிழகத்தின் கல்லுக்கட்டி பகுதியில் களியக்காவிளை சார் ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையிலான போலீஸார் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாகத் தொடர்ச்சியாக இரு லாரிகள் வந்தன. போலீஸார் அவற்றைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் லாரிகள் நிற்கவில்லை. மிக அதிகவேகத்தில் சீறிப்பாய்ந்தன. உடனே போலீஸார் லாரியைத் துரத்திச் சென்றனர். போலீஸார் விடாமல் துரத்துவதைப் பார்த்து லாரியின் ஓட்டுனர்கள் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு இறங்கி தப்பியோடி விட்டனர். தொடர்ந்து போலீஸார் லாரியை சோதனை செய்த போது அதில் 26 டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

போலீஸார் கைப்பற்றிய 26 டன் ரேசன் அரிசியும் காப்பிக்காடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கடத்தல் வாகனத்தையும் விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஒரே நாளில் 26 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாரை பலரும் பாராட்டினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in