கோடநாடு வழக்கில் 217 பேரிடம் விசாரணை!

உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்
கோடநாடு வழக்கில் 217 பேரிடம் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்வதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017- ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்தது. மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தாங்கள் குறிப்பிடும் அனைவரையும் விசாரிக்கக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அதில், எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகவும், காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி வி.கே.சசிகலா, இளவரசி ஆகியோருக்குத்தான் தெரியும் எனவும், வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் மேல் விசாரணை நடந்துவருவதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் யாரை விசாரிக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரி நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரிய தீபுவின் கூடுதல் மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், மேல் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும், இதுவரை 217 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in